கோயம்த்தூர் குசும்பு

நம்ம சுதர்சன் கோயம்த்தூரப்பத்தி அழகா ஒரு பதிவு போட்டு நிர்மலா காலேஜ்ல இருந்து சிறுவாணித்தண்ணி வரைக்கும் அலசியிருந்தாரு. எல்லாஞ்செரிதேன், முக்கியமான ஒன்ன விட்டுட்டாரு - அதான் கோயம்த்தூர் குசும்பு. யோசிங்க. பாக்யராஜு, சத்யராஜு, கவுண்டமணி, சுதர்சன் கோவாலு, ... யப்பா, குசும்பால வளர்ந்த கோயம்த்தூர் பிரபலங்க கொஞ்சமா நஞ்சமா? அந்த விட்டுப்போன மேட்டர பேசத்தான் இந்தப்பதிவு.

ஊருப்பக்கம், இந்த பெரிசுகளுக்கு இருக்குற குசும்பு இருக்குதே, தாங்க முடியாதுங்க. காலைல சின்ன வெங்காயத்த தொட்டுக்க வெச்சி பழைய கஞ்சிய மோர்ல விட்டு ஒரு கட்டு கட்டிட்டு, வெளித்திண்ணயில உக்காந்துகிட்டு போறவாறவுங்ககிட்ட பண்ணற லோலாயி இருக்கே. ஹீம்ம்ம்.
பெரிசு : ஏ புள்ள செம்பகம். ஊருக்கு போன உம்புருசன் இன்னும் வல்லியாக்கு?
செண்பகம்: ஏனுங்க மாமோய்? அது உங்கிட்ட கடன் கிடன் வாங்குச்சாக்கு?
பெரிசு : இல்ல புள்ள, ரொம்ப சந்தோசமா தெரியறியே, அதான் கேட்டன்
செண்பகம்: ம்ம்ம், சாயங்காலம் ஒரு டம்ளர் டீத்தண்ணி குடு புள்ளன்னு ஊட்டுப்பக்கம் வருவீங்க இல்ல, கோமியத்த கலந்து குடுக்கறன் பாருங்க

கலியாண வூட்டுக்கு போனா பந்தியில உக்காந்தமா, அட்சதய போட்டமா, கிளம்புனமான்னு இருக்க மாட்டாங்க நம்ம பாட்டாளி மக்கள்:
பாட்டாளி 1: ஏம்பா, இந்த தடவ உங்களுக்கு ஆழியாத்து தண்ணி ஒரு மட தான் வரும்போல?
பாட்டாளி 2: ஆமாப்பா. இந்த பி.ஏ.பி. காரனுக எப்பயும் இப்படித்தான். ஒழுங்கா என்னைக்கு தொறந்து விட்டுருக்கானுக?
பாட்டாளி 1: இந்த அமேரிக்காக்கார பசங்களுக்கு ஒரு லெட்டர் போடவேண்டியது தான?
பாட்டாளி 2: நம்மூரு மினிஸ்டருக்கு லெட்டர் போட்டா செரி. அவனுகளுக்கு எதுக்கு?
பாட்டாளி 1: இல்ல நம்ம லெட்டர் போட்டு கூப்டா, ஈராக்ல போயி சதாம் உசேன தூக்கில போட்ட மாதிரி இங்க வந்து இவனுகலயும் தூக்கில போட்டுவான் இல்ல?
பாட்டாளி 2: ஏம் பேச மாட்ட? போன வருசம் மழ இல்லாம தென்ன மரமெல்லாம் காஞ்சு, உயிர் தண்ணி கூட விட மாட்டேன்னாங்களே, அப்ப நீ போட வேண்டியது தான?
பாட்டாளி 1: போட்டனப்பா. ரெண்டு மாசம் கழிச்சி, அட்ரஸ் செரியில்லைன்னு திரும்பி வந்திருச்சு
பாட்டாளி 2: பங்காளி, உங்கொழுப்பு இருக்கே, அதுக்கே உன்னத் தூக்குல போடச்சொல்லி லெட்டர் போடனும்

இந்த மாதிரி லந்து பண்றவங்க எல்லாம் வயக்காட்டுப் பக்கம் தான்னு இல்லீங்க. டவுனு பக்கமுந்தான்:
பயணி : ஏனுங்கன்னா, இந்த பஸ்ஸு ராசபாளையம் போகுமுங்களா?
கண்டக்டர் : நீ லட்ச ரூவா குடு கண்ணு, மெட்ராசுக்கே போகும்
பயணி : ஹுக்கும். லட்ச ரூவா கையில இருந்தா நான் ஆட்டோ புடிச்சி போயிட மாட்டனாக்கு

இந்த மாதிரி பக்கத்தூட்டு பயலானாலும் செரி, முன்ன பின்ன தெரியாத ஆளானாலும் செரி, லொள்ளு பேசி, நக்கல் பண்ணி, வம்பு இழுக்கலீன்னா, ராத்திரிக்கு தூக்கம் வராது. அதான்னுங்க கோயம்த்தூர் குசும்பு.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    catching up on old blogs... :) good one